என் மலர்
இந்தியா

சேட்டை செய்ததற்காக மகனின் கை, கால்களில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட தாய் கைது
- சூடான இரும்புக் கம்பியால் குழந்தையின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
- தீக்காயங்களைக் காட்டி, தனது தாய்தான் சூடு வைத்ததாகக் கூறும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், சேட்டை செய்ததற்காக தனது மகனின் கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைத்த ஒரு தாய் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹுப்பள்ளி, திப்பு நகரில் திங்கட்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சேட்டைகள் காரணமாக ஆத்திரமடைந்த தாய் அனுஷா ஹுலிமாரா, இந்த கொடூர தண்டனையை அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூடான இரும்புக் கம்பியால் மகனின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நலத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான ஆதரவையும் கவனிப்பையும் வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.






