என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

அதானி விவகாரத்தில் கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

- தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
- அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம்.
புதுடெல்லி :
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?
கூட்டு விசாரணைக்குழு கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட எங்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசினால், அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.
அப்படி அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அரசு அனுமதிக்க வேண்டும்.
அதானி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் 'செபி' தலைவர் மதாபி புரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
அதானிக்கும், அரசுடனான அவரது நிறுவனங்களின் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
அதேநேரம் நாங்கள் எப்போதும் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறோம். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகும். கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இதைப்போல தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் அது விதிகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விதிகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும்.
அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
