search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை- நிதிஷ்குமார் பேட்டி
    X

    இந்தியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை- நிதிஷ்குமார் பேட்டி

    • இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.
    • விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

    பாட்னா:

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டு வெளியில் வந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    பீகாரில் இதுவரை லல்லு பிரசாத் யாதவுடன் இருந்த கூட்டணியை நான் முறித்துக் கொள்கிறேன். அவர் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து இன்று முதல் நான் வெளியேறுகிறேன். அரசியல் சூழ்நிலை காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

    கடந்த ஆண்டு இந்தியா கூட்டணியை நான் உருவாக்கினேன். ஆனால் இந்தியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை. எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

    இந்தியா கூட்டணி தனது திட்டங்களில் இருந்து முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்ப்புகள் எதையும் குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றப்படவில்லை.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்தியா கூட்டணி தொடக்கத்தில் இருந்தே எதையும் செய்யவில்லை. எந்தவொரு திட்டத்தையும் இந்தியா கூட்டணியால் கொண்டு வரவும் இயலவில்லை.

    அதற்கு மாறாக இந்தியா கூட்டணியின் போக்கு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கவனத்தை திசை திருப்பியதால் குறிப்பிட்ட இலக்குக்கு செல்ல இயலவில்லை. அந்த வகையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று முதல்-மந்திரிபதவியை ராஜினாமா செய்து விட்டேன்.

    ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

    இனி நான் புதிய கூட்டணி அமைப்பேன். அந்த கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணியாக நிச்சயம் அமையும். எனது அரசுக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

    Next Story
    ×