என் மலர்
இந்தியா

வாக்கு திருட்டு: ராகுலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம்! - சரியா? சமாளிப்பா?
- ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.
கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.
செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி 40 நிமிடங்களுக்கு மேலாக செய்தியாளர்கள் முன்னிலையில் அளித்த விரிவான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு விளக்கம் ஏற்புடையதா?
ஆலந்து தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியும் எந்த ஆதாரங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. 1 வாரத்திற்குள் கர்நாடக சிஐடி கேட்ட ஆதாரங்களை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் கேடு விதித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் நடந்ததாகவும் இந்த விஷயத்தை விசாரிக்க FIR பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
ஆனால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு ஏதேனும் கண்டறியப்பட்டதா? இல்லையா? என்பதை குறித்து தேர்தல் ஆணையம் தனது பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.
தேர்தல் ஆணையம் என்பது இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அந்த தூணின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான விரிவான பதிலை அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆதாரம் கேட்கும் தேர்தல் ஆணையம், முதலில் அவர் கேட்கும் ஆதாரங்களை வெளியிட்டு தன்னுடைய நம்பக தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு குடிமக்களின் எண்ணமாகும்.






