என் மலர்
இந்தியா

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
- ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச எல்லையை தாண்டி நடத்தப்பட்ட ஆழமான தாக்குதல்.
- அமைதியை கடைபிடித்துக்கொண்டு, பயங்கரவாதிகளை அழிப்பதுதான் நோக்கமாக இருந்தது.
புதுடெல்லி:
டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், மும்பை தாக்குதலுக்கு பிறகு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.
அந்த தாக்குதலை தொடர்ந்து, பீகாரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தி விடுத்தார். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, அவற்றை உலகம் தற்போது புரிந்து கொண்டு விட்டது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச எல்லையை தாண்டி நடத்தப்பட்ட ஆழமான தாக்குதல். மிகவும் துல்லியமான தாக்குதல். ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகள் மட்டுமே துன்புறுத்தப்பட்டனர். அமைதியை கடைபிடித்துக்கொண்டு, பயங்கரவாதிகளை அழிப்பதுதான் நோக்கமாக இருந்தது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, ஒரு சர்வதேச பயங்கரவாதி (பின்லேடன்), அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி, அதை தனது கண்காணிப்பில் செயல்படுத்தினார்.
அவரை 2011-ம் ஆண்டு மே 2-ந் தேதி அதே போல், அமெரிக்க படைகள் அழித்தன. அதுபோல், இந்தியாவும் செய்து முடித்துள்ளது. உலகத்துக்கு தெரியப்படுத்த செய்து முடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.






