search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு மாயாவதி கட்சி ஆதரவு
    X

    துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு மாயாவதி கட்சி ஆதரவு

    • துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது.
    • மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    லக்னோ :

    நமது நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை மறுதினம் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) களம் காண்கிறார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்ட தருணத்தில், பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் உச்ச பதவியான ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது நன்றாக தெரிந்த ஒன்றுதான்.

    தற்போது 6-ந் தேதி நடக்கிற துணை ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பரந்த பொது நலனையும், அதன் நகர்வையும் மனதில்கொண்டு, எங்கள் கட்சி ஜெதீப் தன்கருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 10 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் மாயாவதியின் கட்சி, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை வழங்கியது நினைவுகூரத்தக்கது.

    இதற்கிடையே எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த கட்சி எம்.பி. சஞ்சய்சிங் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×