என் மலர்
இந்தியா

இந்தியா செய்த உதவியை மறந்து நச்சுப் பாம்பாக மாறிய துருக்கி
- இறந்த சுற்றுலாப் பயணிகளின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக் கூட துருக்கி அதிபர் விரும்பவில்லை.
- பாகிஸ்தான் துருக்கியின் ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.
இந்தியா உதவிக்கு நன்றி காட்டாவிட்டாலும் பரவாயில்லை துரோகம் செய்யும் நச்சுப்பாம்பாக துருக்கி மாறிவிட்டது.
துருக்கியில் கடந்த 2023-ம் ஆண்டு ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது உதவியை அறிவித்த முதல் நாடு இந்தியாதான். ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மிகப்பெரிய மனிதாபிமான உதவிகளை வழங்கியது. துருக்கியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக மோடி அரசாங்கம் சிறப்பு கிசான் டிரோன்களை அனுப்பியுள்ளது.
நாம் அப்போது மனிதாபிமானத்தைக் காட்டினோம் என்றால் அவர்கள் அதை மறந்துவிட்டு இப்போது இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானுக்கு டிரோன்களை அனுப்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் இந்தியா மீது பாகிஸ்தான் பெரிய அளவிலான டிரோன் தாக்குதலை நடத்தியது. சுமார் 300 முதல் 400 டிரோன்களை ஏவியது. இந்தியா அவற்றை தகர்த்தெறிந்தது. சிதறிய டிரோன் துண்டுகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட அசிஸ் கார்டு சோனகர் டிரோன்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
துருக்கிய அதிபர் எர்டோகனுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்தியா மீது ஆழ்ந்த வெறுப்பு உள்ளது. அதை அவர் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளின் செயல்களை உலகம் கண்டித்து வரும் நேரத்தில், எர்டோகன் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அவர்கள் பாகிஸ்தானை புகழ்ந்தனர். மேலும் துருக்கி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை. இறந்த சுற்றுலாப் பயணிகளின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக் கூட துருக்கி அதிபர் விரும்பவில்லை.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப பிறகு இந்தியா பாகிஸ்தானைத் தாக்கும் என்று துருக்கி முன்கூட்டியே கணித்திருந்தது.
உலகமே இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் துருக்கி அரசாங்கம் 6 ராணுவ விமானங்களில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்பியது.
கடந்த மாதம் 28-ந்தேதி பாகிஸ்தானில் துருக்கிய சி-130இ ஹெர்குலஸ் விமானம் தரையிறங்கியதை சர்வதேச வான் கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டறிந்தன.
இருப்பினும், துருக்கி தனது போர் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியதாக அறிவித்து தப்பிக்க முயன்றது.
பின்னர் அது கராச்சி துறைமுகத்திற்கு ஒரு போர்க்கப்பலையும் அனுப்பியது. இப்போது பாகிஸ்தான் துருக்கியின் ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய நாடுகளில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்டன. காஷ்மீர் பிரச்சனையில் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த காலங்களில் பல சர்வதேச தளங்களில் இந்தியாவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
துருக்கியின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.






