என் மலர்
இந்தியா

50% வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி: ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கிறார்
- இந்திய பொருட்கள் மீதானா வரியை 25 சதவீதமாக உயர்த்தியது.
- ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவாம் என தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 7-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளதால் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நியாயமற்றது என மத்திய வெளியுறவு துறை தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச்சபை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக உலக தலைவர்களின் விவாதம் செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சபையில் எந்தெந்த உலக தலைவர்கள் உரையாற்ற உள்ளனர் என்ற பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 23 -ந்தேதி உரையாற்றுகிறார். அவர் அதிபராக 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஐ.நா. சபையில் பேச இருக்கிறார். பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தவிர இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தின் போது அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்கபடுகிறது.
இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச இருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் டிரம்பை சந்தித்து பேசினார். இதையடுத்து அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 2- வது முறையாக டிரம்ப் பை சந்திக்க இருக்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் அதிகரித்து இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.






