என் மலர்
இந்தியா

நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் வரை பணியாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்பு
- நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
- தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் என மம்தா ஏற்கனவே கூறியிருந்தார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியர், அலுவலர் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.
மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவதாலும், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைக்கு அதிக காலம் ஆவதாலும் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். இதனால் இந்த வருடம் இறுதி வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த முறையீடு மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
மேலும், புதிய ஆசிரியர் தேர்வுக்கான நடைமுறையை மே 31ஆம் தேதிக்குள் தொடங்கி, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி, தகுதியான எந்தவொரு ஆசிரியரும் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படமாட்டார்கள் எனக் கூறி வந்தார்.
இன்று, உச்சநீதிமன்றம் அவர்களை டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதற்கான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சதிகளை நாங்கள் ஒருபோதும் அனுமிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.






