என் மலர்
இந்தியா

ஏற்கனவே எங்க மேல குற்றம் சொல்றாங்க.. இதுல ஜனாதிபதி ஆட்சிக்கு வேற உத்தரவு போடணுமா? - உச்சநீதிமன்றம்
- திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
- இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
இதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக விமர்சித்தது. ஆனால் போராட்டத்தில் திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரும் வரை அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் முன் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர், இந்த மனுவை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி கவாய், இதை அமல்படுத்துமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? தற்போதுள்ள நிலையில், ஏற்கனவே நிர்வாகத்தில் (நீதித்துறை) அத்துமீறுகிறது என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.சுப்ரீம் கோர்ட்டு சூப்பர் பாராளுமன்றம் போல் செயல்படுவதாக தன்கர் தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.இந்த காருத்துகளின் பின்னணியில் நீதிபதி பி.ஆர்.கவாய் இவ்வாறு பேசியுள்ளார். பி.ஆர்.கவாய் வரும் மே 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.






