என் மலர்
இந்தியா

20 ஆண்டுகால வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஒரே நாளில் ஒழித்துக்கட்டிய மோடி அரசு - ராகுல் காந்தி வேதனை
- உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
- கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.
விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.
விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.






