என் மலர்
இந்தியா

பாலை பாதுகாக்க பூனைக்கு பொறுப்பு.. ஐ.நாவின் சில முடிவுகளால் கடும் அதிருப்தி - ராஜ்நாத் சிங்
- பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமையில் பாகிஸ்தானுக்கு இடம்.
- அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.
பயங்கரவாதம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) சில முடிவுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று டேராடூனில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைப்பாட்டையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் பாகிஸ்தானுக்கு துணை இருக்கை அளித்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
" அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்," என்று கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் தந்தை" என்று தெரிவித்தார். எனவே "இது பாலை பாதுகாக்க பூனையை காவல் வைப்பது போன்றது" என்று கூறினார்.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து, புகலிடம் அளிக்கும் நாடுகளை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா. உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் ஐ.நா. எடுத்த பல முடிவுகள் கேள்விக்குறியாகிவிட்டன என்றும் அவர் கூறினார்.






