என் மலர்
இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்: 187 ஆண்டுகள் சிறை தண்டனை- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
- மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை.
- சாபம் விட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் அலகோடு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி. அந்த பகுதியில் உள்ள மதரசா ஒன்றில் ஆசிரியராக இருந்துவந்த அவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 2020-2021 ஆண்டுகளில் மோதிரத்தை காண்பித்து ஏமாற்றி சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்திருக்கிறார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால், "சாபம் விட்டு விடுவேன்" என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து பழையங்காடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் முகமது ரபி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கேரளா தளிப்பரம்பா போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ், குற்றம் சாட்டப்பட்ட முகமது ரபிக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.9 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முகமதுரபியை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போக்சோ வழக்கில் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது ரபி, இதற்கு முன்பு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 26 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் தான், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






