என் மலர்

  இந்தியா

  ஓ.பி.எஸ். கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு- சென்னை ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தல்
  X

  ஓ.பி.எஸ். கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு- சென்னை ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
  • ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மிகவும் பிரதானமாக எதிர்பார்த்தார்.

  புதுடெல்லி:

  அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உருவானதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

  ஜூன் 23-ந்தேதி அ.தி.முக. பொதுக்குழுவை நடத்த முடியாதபடி ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் கடந்த 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டது.

  எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டை அணுகி அந்த கூட்டத்தை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அதிரடியாக சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

  மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வம் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதை தகர்ப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையம், கோர்ட்டு, சட்டசபை, சபாநாயகர் மற்றும் காவல்துறையை நாடி உள்ளார்.

  முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற தடை இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்ததுதான் தனக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கருதினார். இதனால் அந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

  ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் , 'ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல், உரிய அழைப்புக் கடிதம் அளிக்காமல் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றுள்ளது. இதை சென்னை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை.

  எனவே 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். அந்த கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

  இதே போன்று பி.வைரமுத்து என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

  இந்த வழக்குகள் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அது நீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (இன்று) அதே அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

  அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பினரிடமும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீல்களை பார்த்து, '11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது? என்று கேட்டனர்.

  அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகள் அனைத்தும் மீறப்பட்டன. அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் கட்சியின் விதிகளை மீறி எடுக்கப்பட்டதாகும். அவை செல்லாது' என்று தெரிவித்தனர்.

  இந்த பதிலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்கவில்லை. அவர்கள் இரு தரப்பு வக்கீல்களையும் பார்த்து, ' மீண்டும் நீங்கள் இணைய வாய்ப்பு உள்ளதா?' என்று கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீலும் , 'இணைவதற்கு வாய்ப்பே இல்லை' என்று தெரிவித்தனர்.

  இதையடுத்து இரு தரப்பிலும் இதுவரை பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள், எந்தெந்த கோர்ட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேட்டனர். அந்த தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்களும் தெரிவித்தனர்.

  அந்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு அவர்கள் தங்களது தீர்ப்பை வெளியிட்டனர். ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை என்பது அப்போது தெரியவந்தது.

  அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்தான் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அணுகவேண்டும். சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்கும்.

  ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து 3 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

  இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

  சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மிகவும் பிரதானமாக எதிர்பார்த்தார்.

  ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் தலையிட மறுத்துள்ளது. இதனால் மீண்டும் .ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×