என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊழலில் காங்கிரஸ் இரட்டை பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளது- பிரதமர் மோடி கடும் தாக்கு
    X

    ஊழலில் காங்கிரஸ் இரட்டை பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளது- பிரதமர் மோடி கடும் தாக்கு

    • அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் உணர்வை அவமதிக்கிறார்கள்.
    • அவர்களின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம் ஹோஷி யார்பூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பல தசாப்தங்களுக்குப் பிறகு, மத்தியில் முழு பெரும்பான்மை அரசாங்கம் ஹாட்ரிக் அடிக்கப் போகும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, ஆதம்பூரில் உள்ள விமான நிலையத்திற்கு குரு ரவிதாசின் பெயரை சூட்டுவோம். ஏழைகள் நலனே எனது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை. இதில் பெரிய உத்வேகம் குரு ரவிதாஸ் ஆவார்.

    பா.ஜனதாவின் 3-வது பதவிக்காலத்தின் முதல் 125 நாட்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. 10 ஆண்டுகளில் நாடு வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை யாரையும் பறிக்க விடமாட்டேன் என்று நான் உறுதிமொழி எடுத்து உள்ளேன். என்னுடைய இந்த முயற்சியால் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் கொதிப்படைந்து உள்ளன. எஸ்.சி.-எஸ்.டி., ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை பறித்ததுதான் அவர்களின் சாதனை. அவர்கள் டாக்டர் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் உணர்வை அவமதிக்கிறார்கள்.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்க நினைக்கிறார்கள். அவர்களின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

    அவர்களின் வாக்கு வங்கியின் மீதுள்ள அன்பின் காரணமாக, பிரிவினையின் போது கர்தார்பூர் சாஹிப் மீதான இந்தியாவின் உரிமையை அவர்களால் திருத்த முடியவில்லை. இதே வாக்கு வங்கிக்காக ராமர் கோவில் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்தனர். சமாதான அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

    இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். இவர்கள் தான் எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சட்டத்தை கழுத்தை நெரித்தவர்கள்.

    1984-ம் ஆண்டு சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. ஊழலில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    Next Story
    ×