என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது- பிரதமர் மோடி
    X

    காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது- பிரதமர் மோடி

    • எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
    • 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.

    ஆனால் பா.ஜனதா 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றிப்பெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது. எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

    காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    அவர்கள் பாகிஸ்தானின் வெடிகுண்டு பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் நிலையை பார்த்தால் அதை எப்படி வைத்திருப்பது என்று தெரியாமல், தங்கள் வெடிகுண்டுகளை விற்க ஆட்களை தேடுகிறார்கள்.

    ஆனால் தரம் பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் அவற்றை வாங்க விரும்பவில்லை. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

    26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பா.ஜனதா அரசின் முதல்வராக வருவார்.

    ஒடிசா முதல்-மந்திரியாக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதல்-மந்திரி சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கூட்ட மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்திய மோடி, அவரது பாதங்களை தொட்டு வணங்கினார்.


    Next Story
    ×