என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாட்டின் மனுக்கள் தள்ளுபடி: மேகதாது திட்டத்தை முன்னெடுக்க மீண்டும் கர்நாடக அரசு தீவிரம் Tamil Nadus petitions dismissed: Karnataka government once again keen to carry out Mekedatu project
    X

    தமிழ்நாட்டின் மனுக்கள் தள்ளுபடி: மேகதாது திட்டத்தை முன்னெடுக்க தீவிரம் காட்டும் கர்நாடகா

    • திட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உண்டு
    • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, மாநிலத்தில் உள்ள பல்வேறு நதிப் படுகைகளில் பாசனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குதல் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை அறிவித்தார்.

    அதில் முக்கியமான ஒன்று மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய சித்தராமையா, "இத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நமது மாநிலத்திற்குக் கிடைத்த மிக முக்கியமான சட்ட ரீதியான வெற்றி" எனக்கூறினார்.

    மேலும் மேகதாது அணை தொடர்பான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்செய்யப்பட்டு, அதனுடன் வனத்துறை அனுமதிக்கான முன்மொழிவு ஆகியவையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த நிபுணர் குழுக்கள் எடுக்கும் முடிவிலேயே இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என சித்தராமையா கூறியுள்ளார். அதேசமயம் திட்ட அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், அது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் நீதிபதிகள் முன்னர் குறிப்பிட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

    மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த டிசம்பரில் இத்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×