என் மலர்
இந்தியா

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் 3 நாட்களில் விசாரணைக்கு வருகிறது
- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவாக இந்தச் சோதனைகள் நடப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனுவை தமிழக அரசு வக்கீல் சபரிஷ் சுப்பிரமணியன் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல் மற்றும் காலி பாட்டில்கள் தொடர்பாக முறைகேடுகள் நடந்து இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. முடிவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தன. இந்த மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை தனது நடவடிக்கையைத் தொடரலாம் என்று அனுமதி வழங்கியது.
ஐகோர்ட்டில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான விசாகனின் வீடு, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழில அதிபர் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகள் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பின்னர் விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2-வது நாளாக சனிக்கிழமையும் சோதனையும், விசாரணையும் தொடர்ந்தது. இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் ஜோதி சங்கரிடம் கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் டாஸ்மாக் நிறுவன சோதனைக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு நேற்று அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் அமலாக்கத்துறை சோதனைகளின் போது பல மணி நேரம் அதிகாரிகளைத் தடுத்து வைத்து துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவாக இந்தச் சோதனைகள் நடப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை தமிழக அரசு வக்கீல் சபரிஷ் சுப்பிரமணியன் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த அப்பீல் மனு 3 நாட்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.






