search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என் தந்தைக்கு எதிராக பேசுவதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: சுப்ரியா சுலே எச்சரிக்கை
    X

    என் தந்தைக்கு எதிராக பேசுவதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: சுப்ரியா சுலே எச்சரிக்கை

    • இப்போது நான் வலுவாகிவிட்டேன்.
    • எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    மும்பை :

    ஒய்.பி. சவான் அரங்கில் சரத்பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னையோ அல்லது வேறு எந்த நபரையோ ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் என் தந்தைக்கு எதிராக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். கட்சி தொண்டர்களுக்கு அவர் தந்தையை விட மேலானவர்.

    நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் இதேபோன்று பதவியேற்றப்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் இப்போது நான் வலுவாகிவிட்டேன். என்னை பலப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எங்கள் உண்மையான போராட்டம் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறைக்கு எதிராக இருக்கும். எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எங்களின் செயல்பாடு இருக்காது.

    நான் சிறிய வேதனை தரக்கூடிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு பெண் தான். ஆனால் நேரம் வந்தால் பெரிய மோதலுக்கு தயாராகும் வகையில் சத்ரபதி சிவாஜியின் தயார் ஜிஜாவாகவும், மராட்டிய பெண் ஆட்சியாளர் அகில்யாபாயாகவும் என்னை மாற்றிக்கொள்வேன்.

    தந்தைக்கு வயதாகி விட்டதாக கூறி வீட்டிற்குள் முடங்க வைக்க முயற்சிக்கும் மகன்களை விட மகள்களாகிய நாங்கள் மிக சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அஜித்பவார் நேற்று தனது உரையின்போது சரத்பவாரின் வயதை சுட்டிக்காட்டி அவரை ஓய்வெடுக்குமாறு வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    சரத்பவாரின் அணியில் இருக்கும் முக்கிய தலைவரான ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "அஜித்பவார் சமீபத்தில் கட்சியின் மாநில தலைவராக விருப்பம் இருப்பதாக கூட்டத்தில் பேசினார். கட்சியில் சில உள் விவகாரங்களை பொது மேடையில் பேசக்கூடாது என்று தெரிந்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அஜித்பவார் எனது காதில் அவரது ஆசையை கிசுகிசுத்திருந்தால் கூட நான் அவருக்கு பதவியை கொடுத்திருப்பேன். சரத்பவார் ஒரே ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் முன்பே பார்த்து இருப்பீர்கள்.

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவர் காரட் மற்றும் சத்தாராவில் நடத்திய பொதுக்கூட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் அவரது தாக்கத்தை நீங்கள் (அஜித்பவார் அணி) உணர்வீர்கள்" என்றார்.

    Next Story
    ×