என் மலர்tooltip icon

    இந்தியா

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்
    X

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்

    • டாஸ்மாக் பொது மேலாளர்களான சங்கீதா, ஜோதி சங்கர் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது.

    புதுடெல்லி:

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையை தொடங்கினார்கள். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தேனாம்பேட்டையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைத்து இந்த விசாரணை நடந்து வருகிறது.

    டாஸ்மாக் பொது மேலாளர்களான சங்கீதா, ஜோதி சங்கர் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொள்முதல் செய்தது மற்றும் பார்களை டெண்டர் விட்டதில் நடைபெற்றிருப்பதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர் வாதாடுகையில்,' கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கில் தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக 44 வழக்குகளை பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை தற்போது தான் வழக்கில் வந்துள்ளனர்.

    ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அமலக்கத்துறையினர் முடக்கினர்.

    அதேபோல டாஸ்மாக் நிர்வாக அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டு வருகின்றது. தனி நபர் தனியுரிமை மீறும் வகையில் ஒட்டுகேட்பு நடத்தி வருகின்றனர், இது தனிநபரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

    அதேவேளையில், தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்து இதுபோன்று நடந்துள்ளனர். இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியது? அமலாக்கத்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்' என தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து பரபரப்பான அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

    மேலும் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்கள். விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-

    டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. அமலாக்கத்துறை வரம்புமீறி செயல்படுகிறது. டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை எல்லைகளை மீறிய செயல். டாஸ்மாக்கில் முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த டாஸ்மாக் நிறுவனத்திடமும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்?

    டாஸ்மாக் என்பது அரசு சார்ந்த நிறுவனமாகும். தனிநபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் அமலாக்கத்துறை எப்படி விசாரிக்க முடியும்? தனிநபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?

    நிதி சார்ந்த முறைகேடுகள் எங்கு நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறையால் கூற முடியுமா? டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவது போல் உள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×