என் மலர்
இந்தியா

சோபியா குரேஷியை இழிவாக பேசிய அமைச்சர்: மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் காட்டம்..!
- கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. அமைச்சர் பேசினார்.
- கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதான அவதூறு கருத்துக்கு தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார்.
நம் நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் பொறுப்புணர்வோடு பேசவேண்டும் என்று கூறி குன்வர் விஜய் ஷாவை உச்ச நீதிமன்றம் அப்போது கடுமையாக கண்டித்தது.
இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் சோபியா குரேஷி குறித்து அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை இழிவாக பேசியதற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.
அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், "நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும். நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தது.
மேலும், அமைச்சர் விஜய் ஷா கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா கூறிய கருத்துகள் தொடர்பாக விசாரிக்க, மத்தியப் பிரதேசத்திற்கு வெளியே இருந்து வந்த ஒரு பெண் அதிகாரி உட்பட 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு விஜய் ஷா முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.






