search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
    X

    உத்தவ் தாக்கரே 

    ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அணியினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரேக்கு மும்பையைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நேற்று கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×