என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானுடனான போரை நிறுத்த டிரம்பை மத்தியஸ்தம் செய்ய இந்தியா கேட்கவில்லை - சசிதரூர்
    X

    பாகிஸ்தானுடனான போரை நிறுத்த டிரம்பை மத்தியஸ்தம் செய்ய இந்தியா கேட்கவில்லை - சசிதரூர்

    • நாங்கள் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு மட்டுமே பழிவாங்குகிறோம்.
    • பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும்.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்த நடவடிக்கை தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது.

    இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினர். இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான குழு பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அமெரிக்காவுக்கு சென்றடைந்தது. அப்போது வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது:-

    பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை. அமெரிக்க அதிபர் பதவி மற்றும் அதிபர் டிரம்ப் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதேவேளையில் நாங்கள் யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை. பல்வேறு வெளியுறவு அமைச்சர்களிடமிருந்து நமது வெளியுறவு அமைச்சருக்கும், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் அழைப்புகள் வந்தன. இந்த விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருந்தது. அது உண்மைதான். ஆனால் இந்த அழைப்புகளில் எதிலும் வர்த்தகம் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு மட்டுமே பழிவாங்குகிறோம். இந்த மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என்று எங்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

    இந்தியாவின் தாக்குதல்களில் பெரிய அளவிலான சேதத்தை சந்தித்த பிறகு, மே 10-ந்தேதி பாகிஸ்தான் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரியது.

    எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா சிறிது காலமாகவே புரிந்து கொண்டு உள்ளது என்று நினைக்கிறேன். எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டியவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×