என் மலர்
இந்தியா

ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல்.. 17 மாணவிகள் பகீர் புகார் - டெல்லி சாமியாருக்கு போலீஸ் வலை
- சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் கட்டாயப்படுத்தினர்.
- மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலம் அளித்தனர்.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்துக்கு சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இயக்குநராக உள்ளார்.
இந்த ஆசிரமத்தின் கீழ் ஸ்ரீ சாரதா இந்திய பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை (EWS) சேர்ந்த மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில், முதுநிலை டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.
அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புதல், மற்றும் தேவையற்ற உடல் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சாமியார் மீது மாணவிகள் சுமத்தியுள்ளனர்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை பதவிநீக்கம் செய்து ஆசிரம நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.






