என் மலர்tooltip icon

    இந்தியா

    மூத்த ஐபிஎஸ் அதிகாரி லஞ்ச வழக்கில் கைது.. ரூ.7.5 கோடி பணம், நகைகள், சொகுசு கார்கள் பறிமுதல்
    X

    மூத்த ஐபிஎஸ் அதிகாரி லஞ்ச வழக்கில் கைது.. ரூ.7.5 கோடி பணம், நகைகள், சொகுசு கார்கள் பறிமுதல்

    • ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
    • மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் பதேகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்பட்டா. பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வரும் இவர் ரோபர் ரேஞ்சில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் ஹர்சரண்சிங் புல்லர் ஐபிஎஸ் மீது சி.பி.ஐ. அதிகாரியிடம் லஞ்ச புகார் தெரிவித்தார்.

    அதில், டி.ஜ.ஜி. ஹர்சரண்சிங் புல்லர் தன்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்ததாகவும், அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக தன்னிடம் ரூ.8 லட்சம் கேட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி, ஆகாஷ்பட்டாவிடம் ரூ.8 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். அவர் டி.ஐ.ஜி.யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது சி.பி.ஐ. அதிகாரிகள் ஹர்சரண்சிங் புல்லரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைதை தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக ரொக்கப்பணம், தங்க நகைகள், கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பைகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை எடுத்து எண்ணியபோது அதில் மொத்தம் ரூ.7.5 கோடிக்கு மேல் இருந்தது. அதேபோல நகைகளை ஆய்வு செய்ததில் மொத்தம் 2½ கிலோ தங்கம் மற்றும் நகைகள், 22 உயர் ரக கைக்கடிகாரங்கள், ஒரு மெர்ஷிடஸ் கார், ஆடி கார், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின.

    மேலும் அவரது வீட்டில் இருந்து இரட்டை குழல் துப்பாக்கி, ஒரு கைத்துப் பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ஏர்கண் உள்ளிட்ட துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கைதான ஹர்சரண்சிங் புல்லரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு இடைத்தரகராக கிருஷ்ணா என்பவர் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணாவையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களை வீடியோ ஆதாரங்களாக போலீசார் சேகரித்துள்ளனர்.

    கைதான ஹர்சரண்சிங் புல்லர் 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் பாட்டியாலா ரேஞ்சின் டி.ஐ.ஜி., விஜிலென்ஸ் பிரிவின் இணை இயக்குனர் மற்றும் மொகாலி, சங்கரூர், தன்னா, ஹோஷியார்பூர், பதேஹ்கர் சாஹிப் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம்சிங் மஜிதியாவுக்கு எதிரான உயர்மட்ட போதைப பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவை ஹர்சரண்சிங் புல்லர் வழி நடத்தி வந்துள்ளார்.

    மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோபர் ரேஞ்சின் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற அவர் மொகாலி, ரூப் நகர் மற்றும் பதேகர்சாகித் ஆகிய மாவட்டங்களில் மேற்பார்வை செய்து வந்த நிலையில், தற்போது லஞ்ச வழக்கில் கைதாகி உள்ளார்.

    இவரது தந்தை எம்.எஸ்.புல்லர் பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஆவார். கைதான டி.ஐ.ஜி. ஹர்சரண்சிங், கிருஷ்ணா ஆகிய இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    Next Story
    ×