search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தியின் 2-வது கட்ட நடைபயணம் தொடங்கியது
    X

    மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தியின் 2-வது கட்ட நடைபயணம் தொடங்கியது

    • நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுப்பு.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அவர் பாத யாத்திரை சென்றார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங் கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்கள் அவரது நடைபயணம் இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ராகுல்காந்தி 2-வது கட்ட மாக நடைபயணம் மேற் கொள்ள முடிவு செய்தார்.

    'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது.

    அங்குள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நடை பயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதை தொடர்ந்து மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கியது.

    ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    நடைபயணத்தையொட்டி மணிப்பூர் பா.ஜனதா அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. தொடக்க விழா 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெறக் கூடாது, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பேரணியின்போது நாட்டுக்கு எதிரான, மத ரீதியான கோஷங்களை எழுப்பக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசு அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில் அமைதி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் விதமாக நடைபயணத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தவுபல் துணை கமிஷனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுத்துள்ளது.

    ராகுல்காந்தியின் முந்தைய நடைபயணத்தை போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலும் பஸ்களில் நீதிப்பயணம் மேற்கொள்ளப் பட உள்ளது. சில வேளைகளில் நடைபயணம் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மொத்தம் 6713 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 110 மாவட் டங்கள், 100 எம்.பி. தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத் மராட்டியம் ஆகிய 15 மாநிங்களில் நடைபயணம் மேற் கொள்ளப்படும். மார்ச் 20 அல்லது 21-ந் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.

    பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்பு சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜனதா ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்த பயணம் மேற்கொள்ளப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×