என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹைட்ரஜன் குண்டு பிரதமர் தொகுதிக்கு பொருந்துமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்..!
    X

    ஹைட்ரஜன் குண்டு பிரதமர் தொகுதிக்கு பொருந்துமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்..!

    • யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம்.
    • வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த இருக்கிறோம் என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். முறையாக (systematic) வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று இன்றும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி இன்று கூறியதாவது:-

    யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம். வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. நடந்த விசயங்களில் 100 சதவீதம் வெளிவரப் போகின்றன.

    ஹைட்ரஜன் குண்டு குறிப்பாக பிரதமர் மோடிக்கான வாரணாசிக்கு பொருந்துமா? என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்வியை ராகுல் காந்தி புறந்தள்ளினார். அது உங்களுடைய யூகம். நான் என்னுடைய வேலையை செய்வேன்.

    மகாதேவ்புரா மற்றும் அலந்து தொகுதியில் நடைபெற்றதை நாங்கள் காண்பித்தோம். நரேந்திர மோடி வாக்கு திருட்டு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை இந்தியாவில் யாரும் சந்தேகிக்காத வகையில் நாங்கள் வெளிக்காட்டப் போகிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் முதல்வாரத்தில் "அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.

    வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது" எனக் கூறியிருந்தார்.

    Next Story
    ×