என் மலர்
இந்தியா

பிரியங்க் கார்கேவின் அமெரிக்க பயணம் - முதலில் மறுத்த மத்திய அரசு பின்னர் அனுமதி
- பிரியங்க் கார்கேவின் அமெரிக்க பயணத்திற்கு முதலில் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
- வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, தனது அமெரிக்க பயணத்திற்கான அனுமதியை வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளார். முன்னதாக அனுமதி மறுத்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 14 முதல் 27 வரை கர்நாடக அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், சிறந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான பரிந்துரைகளுக்காக 25 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ சந்திப்புகளில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்காக நான் மே 15 அன்று அனுமதி கோரியிருந்தேன்.
ஆனால் எனது விண்ணப்பம் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெளியுறவு அமைச்சகம் தனது முடிவை மாற்றிக்கொண்டு அமெரிக்கா செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது" என்றுதெரிவித்தார்.
2 நாட்களுக்கு முன்பு தனது அமெரிக்க பயணத்திற்காக ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தக் கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






