search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்றுள்ளது: ஜனாதிபதி பெருமிதம்
    X

    உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்றுள்ளது: ஜனாதிபதி பெருமிதம்

    • நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
    • பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார்.

    பாராளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் இன்றைய உரை எனது முதல் உரையாகும். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினரின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது.

    சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும், கொண்டாடும். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டியுள்ளது.

    அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் நமது பாரதத்தின் பெருமைமிக்க அடையாளம் ஆகும். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யாமிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    விரைவில் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும். சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்டவை மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்முனைவோரை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் சராசரியாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உள்ளது. நாட்டில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வங்கிகளில் வாராக்கடன் 4 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

    நாட்டின் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. செல்போன் மூலம் பரிவர்த்தனைகள் ரூ.1200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது. ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது.

    இந்தியாவில் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை. 4 சக்திகளை கொண்டு இந்தியா இயங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினர் இந்தியாவின் தூண்களாக உள்ளனர். பழைய குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் இயக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.

    இந்தியாவின் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய செல்போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

    கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே துறையை முழுக்க முழுக்க மின் மயமாக்கும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.

    உதான் திட்டத்தின் கீழ் ஏழை, எளியோர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. தடையற்ற இணைய வசதிக்காக 2 லட்சம் கிராமங்களில் ஆப்டிக் பைபர் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. ஏழை பெண்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.பி. உள்பட 18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு நிதிப்பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நலமான பாரதம், வளமான பாரதம் என்ற நோக்குடன் அமலான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 3 கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உலகளாவிய நெருக்கடிகள் இருந்த போதும் பண வீக்கத்தை அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு உழைக்கிறது. உழவர் அட்டை போன்று நல உதவிகள் நிதி பயன்கள் பெற வழங்கப்பட்ட பிரத்யேக அட்டை மூலம் மீனவர்களும் நேரடியாக பயன் பெறுகின்றனர்.

    பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியும் இரட்டிப்பாகி உள்ளது. கைவினை கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க தனித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முப்படைகளில் மகளிர் நிரந்தரமாக பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருநங்கைகளுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எல்லையோர கிராமங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு கடல் வழியே ஆப்டிக் பைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நக்சல் வன்முறை குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் குறைந்து உள்ளது. பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதில் அளிக்கின்றன.

    கைவினை கலைஞர்கள் பயனடையும் வகையிலும் அத்தொழில்களில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பிரதமரின் விஸ்வகர்ம திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேக் இன் இந்தியா என்ற சொல்லாடல் உலகளவில் இந்தியாவை உயர்த்திப் பிடிக்கும் உலக பிராண்டாக மாறியுள்ளது. செமி கண்டக்டர் துறையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

    ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி திட்டங்களிலும் உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.

    சூரிய ஆற்றல் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியில் உலகளவில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதலிடம் பிடிக்கும். பிரதம மந்திரியின் சூர்யோதயம் என்ற திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களில் மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு செய்யப்பட்டு உள்ளது. பழங்குடியின குடும்பங்கள் குழாய்கள் மூலம் சுத்தமான தண்ணீரை பெற தொடங்கியுள்ளன. பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு 4ஜி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டியுள்ளன. குழந்தைகளிடம் தாய்மொழி வழிக்கற்றலை புதிய தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 5 நாளில் 13 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்தியாவிற்கு என பிரத்யேகமாக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர். மேக் இன் இந்தியாவை நோக்கி உலகமே ஈர்க்கப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க பொருளாதார வளர்ச்சியை விட சமுதாய வளர்ச்சியே முக்கியம்.

    விளையாட்டு வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவை அரசு வழங்கி வருகிறது. விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளிக்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகின் பாராட்டை பெற்றது.

    பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துபவர்களின் சதவீதம் அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. விண்வெளி திட்டங்களிலும் இந்தியா உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது.

    இந்திய பெருங்கடல் உள்பட ஆழ்கடல் கனிமவள அகழ்வு ஆராய்ச்சிக்கான திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி 1 மணி 15 நிமிடங்கள் பேசினார்.

    Next Story
    ×