என் மலர்
இந்தியா

பிரசவத்திற்கு மருத்துவமனை செல்ல சாலை வசதி இல்லை என கர்ப்பிணி பெண்கள் வெளியிட்ட வீடியோ வைரல்
- எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை என்று அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்கள் பேசியுள்ளனர்.
- சாசாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா உறுதியளித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள காதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் பேசியுள்ள கர்ப்பிணி பெண்கள், எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை. நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைகளை சேறு, சகதி நிறைந்த சாலையில் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எங்கள் கிராமத்திற்கு தார் சாலைகளை அமைக்க வேண்டும்" என்று பேசியிருந்தனர்.
சமூக ஊடகங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட லீலு ஷா என்பவர் 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை டேக் செய்து இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "மத்தியப் பிரதேசத்திலிருந்து 29 எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சாலை கிடைக்குமா?" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், அப்பகுதியில் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சித்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா ஆகியோர் உறுதியளித்தனர்.
இது தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, "ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஒரு தேதி உண்டு. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணிகளை முடித்துவிடுவோம். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம்.
இதுவரை சாலை மோசமாக இருந்த காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்ட்டுள்ளார்களா? தேவைப்பட்டால், எங்களிடம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன. எங்களிடம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். எங்களிடம் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வனத்துறையின் ஆட்சேபனைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய மத்தியபிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், "சமூக ஊடகங்களில் யாராவது ஒரு பதிவை போட்டால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா? பட்ஜெட்டுகள் குறைவாகவே உள்ளன. சமூக ஊடகங்களில் கூறப்படும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்






