என் மலர்
இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
- முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
- இந்த தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் கமிஷனும் உடந்தையா என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என செய்தி வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது முதல் மந்திரி பட்னாவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது.
ஐந்தே மாதங்களில் பட்னாவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்தது எப்படி? 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்பின் அறிமுகம் இல்லாத பலர் ஓட்டளித்தனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூறி இருக்கின்றனர். ஒரு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலே அது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையா? தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?
டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆலோசனைக்கு ராகுலை அழைத்தோம். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ராகுலைச் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். அவர் குறிப்பிடும் எந்த நாளிலும் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்க தயாராக உள்ளோம்.
அனைத்து தேர்தல்களும் சட்டவிதிகளின்படியே நடக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்து வைக்கிறோம்.
தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என தெரிவித்துள்ளது.






