என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் - பிரதமர் மோடி
- இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர்.
- ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும்.
போபால்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை 11.30 மணியளவில் அவர் போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் லோக மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விழா நடைபெறும் இடத்துக்கு மோடி காரில் ஊர்வலமாக வந்தார். அங்கு திரண்டு இருந்த மக்கள் தேசிய கொடியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குங்குமப்பூ கலர் சேலை அணிந்த 15 ஆயிரம் பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அஹில்யா பாய் நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். ரூ.300 மதிப்புள்ள அந்த நாணயம் ஹோல்கரின் உருவப்படத்தை கொண்டது.
பழங்குடியினர், நாட்டுப்புறக்கலை, பாரம்பரிய கலைகள் ஆகியவற்றின் பங்களிப்புக்காக பெண் கலைஞர் ஒருவருக்கு தேவி அஹில்யா பாய் தேசிய விருதினையும் மோடி வழங்கினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது:-
மத்திய பிரதேசத்தில் இன்று பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மாநிலத்தின் வசதிகளை அதிகரிக்கும். வளர்ச்சியை துரிதப்படுத்தும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
அஹில்யா பாய் எங்களுக்கு எல்லாம் உத்வேகம் அளித்தார். இந்தியாவின் சக்தி பெண்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.
அஹில்யாபாய் பழங்குடி சமூகத்திற்காக காலி நிலத்தில் விவசாயம் செய்வதற்கான கொள்கையை உருவாக்கினார். இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு பழங்குடி மகளின் வழிகாட்டுதலின் கீழ் எனது பழங்குடி சகோதர-சகோதரிகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அதிகாரத்துக்கான அடையாளமாகும். அது தற்போது வீரத்துக்கான அடையாளமாக மாறி விட்டது. தீவிரவாதிகளுக்கு பெண்கள் சக்தி சவாலாக இருந்தது.
இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர். ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும். தீவிரவாதிகள் இந்தியாவை துண்டாக்க முயற்சி செய்தனர். இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.
எங்களை காயப்படுத்த முயற்சிப்பவர்கள் பாதிப்புகளை சந்திப்பார்கள். எங்கள் மீது தோட்டாக்களை வீசினால், நாங்கள் தோட்டாக்களால் பதிலடி கொடுப்போம் என்று 140 கோடி இந்தியர்கள் கர்ஜிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு தோட்டாவை வீசினால் அதற்கு பீரங்கி குண்டு மூலம் பதிலடி கொடுப்போம். ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கு மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கையாகும்.
பயங்கரவாதிகள் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்கள் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் சத்தமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அவர்களின் (பயங்கரவாதிகள்) மறைவிடங்களுக்குள்ளும் கூட நாங்கள் தாக்குவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
ஜம்முவில் இருந்து குஜராத் எல்லை வரை பல பெண் பி.எஸ்.எப் (எல்லை பாதுகாப்பு படை) வீராங்கனைகள் எல்லையை பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தனர். எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
மேலும் பிரதமர் மோடி தாத்தியா, சத்னா விமான நிலையங்களையும் , இந்தூர் மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உயர் முன்னுரிமை சேவைகளையும் தொடங்கி வைத்தார். ரூ.480 கோடி மதிப்பில் 1271 அடல் கிராம நல் ஆளுமை பவன்கள் கட்டுவதற்கான முதல் தவணைத் தொகையையும் வழங்கினார்.
இந்தக் கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தர கட்டுமானங்களாக இருக்கும். இந்த வசதியானது நிர்வாக செயல்பாடுகள், கூட்டங்கள் நடத்துதல், ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருக்கும்.






