என் மலர்
இந்தியா

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ் -03 செயற்கைக்கோள்: பிரதமர் மோடி பாராட்டு
- ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
- செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜிஎஸ்எல்வி மார்க்-03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்.-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது விண்வெளித்துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் விண்வெளித்துறை எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.






