என் மலர்
இந்தியா

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார்: ஒவைசி கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்
- முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.
- அசாதுதீன் ஒவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அந்நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக முடியும். ஆனால், சட்டமேதை அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிரதமர், முதல்-மந்திரி அல்லது மேயர் ஆக முடியும் என தெளிவாகக் கூறுகிறது.
இறைவனின் அருளால் ஒரு நாள் வரும், அப்போது நானும், இந்த தலைமுறையும் இருக்க மாட்டோம். ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார். முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. அனில் போன்டே கூறுகையில், ஒவைசியின் பேச்சு பொறுப்பற்றது. எந்த ஒரு பெண்ணும் அடிமைத் தனத்தை விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்களே ஹிஜாப் அணிவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஈரான் போன்ற நாடுகளிலும் பெண்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டார்.






