search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது- 20 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.
    • கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாட்னா:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மேற்கொண்டார்.

    தொடக்கத்திலேயே அவரது முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். அப்போது ஜூன் 23-ந்தேதி (இன்று) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஒன்றிணைந்து எதிர்க்க ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சந்திரசேகரராவ், நவீன் பட்நாயக், குமாரசாமி, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, ஓவைசி போன்றவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×