search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் மாற்றம் இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
    X

    அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் மாற்றம் இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்

    • 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்கு சந்தையில் முறைகேடுகள் செய்ததாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது.

    இந்த நிலையில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாங்கள் எங்கள் கோரிக்கையை தொடர்வோம்' என திட்டவட்டமாக கூறினார்.

    அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்தவித தகவல் பரிமாற்றமும் இலலை என கூறிய அவர், அதற்காக ஆளுங்கட்சி முயற்சிக்கவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் 2023 குறித்த கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கையில், 'வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம் எனது தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனச்சட்டங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு நிகழ்ச்சி நிரல் அரசுக்கு இருக்கிறது' என்று குற்றம் சாட்டினார்.

    அதானி விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதன் மூலம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×