என் மலர்
இந்தியா

நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன - மத்திய அரசு
- விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது.
- 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சோ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2.24 லட்சத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைய சராசரியாக 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 2,24,572 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்காக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 774 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் 398 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டவை.
டெல்லியில் ஒரு வழக்கின் விசாரணை முடிவடையச் சராசரியாக 4.5 ஆண்டுகள் ஆகிறது. இதுவே நாட்டின் மிக மெதுவான விகிதமாகும். திரிபுராவில் 4 ஆண்டுகளும், மணிப்பூரில் 3.7 ஆண்டுகளும், குஜராத்தில் 3.5 ஆண்டுகளும் ஆகின்றன.
இதற்கு நேர்மாறாக, புதுச்சேரியில் மிக விரைவாக வெறும் 6 மாதங்களில் விசாரணை முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் சராசரியாக 257 நாட்களும், சத்தீஸ்கரில் 332.5 நாட்களும் ஆகின்றன.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இது குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகங்களில் சாட்சியம் அளிக்கச் சாதகமான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், புலனாய்வுத் திறனை வலுப்படுத்தப் புதிய தடய அறிவியல் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே உள்ளது என தெரிவித்தார்.






