என் மலர்
இந்தியா

எச்சரிக்கையாக காஷ்மீர் பயணத்தை ரத்து செய்த மோடி.. சுற்றுலாப் பயணிகளுக்கு சொல்லாதது ஏன்? - கார்கே
- எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
- மோடி தேசிய நலனை புறக்கணித்து பீகாரில் தேர்தல் பிரச்சாரதிற்கு சென்றார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தால் இந்தத் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் விஜயநகர மாவட்டம் ஹோசபேட்டையில் நடந்த பேரணியில் ராகுல் காந்தியுடன் கார்கே கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றம் சாட்டினார். உளவுத்துறை எச்சரிக்கைக்குப் பிறகு ஏப்ரல் 17 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனது காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்ததாகவும், ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியதாவது, "சுற்றுலாப் பயணிகளுக்கு ஏன் போலீஸ் அல்லது ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை? அவர்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை? அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், 26 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மோடி புறக்கணித்ததற்காக கார்கே மேலும் விமர்சித்தார். "நாட்டிற்கு ஒற்றுமை தேவைப்பட்டபோது, மோடி தேசிய நலனை புறக்கணித்து பீகாரில் தேர்தல் பிரச்சாரதிற்கு சென்றார். இரண்டு முறை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார், ஆனால் அதில் கலந்து கொள்ளவில்லை.
நாங்கள் அதைத் தவிர்த்திருந்தால், நாங்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்போம், ஆனால் அவர் அதைத் தவிர்த்துவிட்டு 'தேசபக்தர்' ஆகவே இருக்கிறார். காங்கிரஸ் தேசத்திற்காகப் போராடியுள்ளது. தேசபக்தி உங்களுக்கு சொந்தம் அல்ல. உண்மையான தேசபக்தி என்பது வெற்றுப் பேச்சுகளில் அல்ல, ஒற்றுமையில் உள்ளது" என்றார்.
கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக அவமதிக்கும் கருத்துக்களைத் தெரிவித்ததாக மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கார்கே கோரினார். "தேசியவாதத்தைப் போதிக்கும் முன் அத்தகையவர்களை முதலில் அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.






