என் மலர்tooltip icon

    இந்தியா

    மறுக்கப்பட்ட MBA கனவு.. பெற்றோர் கட்டுப்பாட்டில்  சிறைப்பட்டு வாழ்ந்த சோனம் - தேனிலவு கொலையாளியின் பின்னணி
    X

    மறுக்கப்பட்ட MBA கனவு.. பெற்றோர் கட்டுப்பாட்டில் சிறைப்பட்டு வாழ்ந்த சோனம் - தேனிலவு கொலையாளியின் பின்னணி

    • ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
    • விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.

    மேகலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

    சோனமின் சகோதரர், தனது தங்கையுடனான உறவுகளை முறித்துக்கொண்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவளை தூக்கிலிடவேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது.

    யார் இந்த சோனம்?

    24 வயதான சோனம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குஷ்வாஹா நகரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை தேவி சிங் ரகுவன்ஷி, 25 ஆண்டுகளாக ஒட்டுப்பலகை (plywood) தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    MBA பட்டம் பெற்று, குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி வாழ வேண்டும் என்பதே சோனமின் கனவாக இருந்தது. ஆனால், தந்தை தேவி சிங், சோனம் ஒரு பெண் என்பதால் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.

    சோனம், வீட்டை விட்டு வெளியேறவோ, மிகச் சிலரைத் தவிர வேறு யாரிடமும் பேசவோ அனுமதிக்கவில்லை. அவரது வாழ்க்கை மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.

    சோனம் தனது வாழ்க்கையை வேலை மற்றும் வீடு என இரண்டிற்குள் சுருக்கிக் கொண்டார். பெற்றோரின் கட்டுப்பாட்டால், சோனம் தனது குடும்பத்தின் பிளைவுட் தொழிற்சாலையிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    சோனமின் சகோதரர் கோவிந்தின் முயற்சியால் குடும்பத் தொழில் மேம்பட்டாலும், சோனமின் மீதான கட்டுப்பாடுகள் தளரவில்லை. அவரது MBA படிக்கும் ஆசை நிறைவேறாமலேயே போனது.

    இந்தக் காலகட்டத்தில்தான் சோனம் தனது தந்தையின் தொழிற்சாலையில் பில்லிங் பிரிவில் பணிபுரிந்த ராஜ் குஷ்யாவை சந்தித்தார். முதலில் அவர்களின் அறிமுகம் வணிக ரீதியானது என்றாலும், நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருப்பினும் கண்டிப்பான சூழலால் தனது உறவை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்தார்.

    இந்தச் சூழலில்தான், சோனமிற்கு அவரது விருப்பத்தை கேட்காமலேயே திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். சமூக திருமண வரன் பார்த்தல் அமைப்பு மூலம் ராஜா ரகுவன்ஷி குடும்பத்தை அவர்கள் தொடர்பு கொண்டனர்.

    இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இல்லை. இரு குடும்பங்களின் அந்தஸ்து உள்ளிட்ட பயோடேட்டா ஒற்றுமைய மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டது.

    கல்வி நிறுவனங்களுக்கு வாடகை பேருந்துகளை வழங்கும் "ரகுவன்ஷி டிரான்ஸ்போர்ட்" என்ற குடும்ப நிறுவனத்தை ராஜா நடத்தி வந்தார். அவர் மூன்று சகோதரர்களில் இளையவர்.

    ராஜாவின் குடும்பத்தினர் தங்கள் மகனுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சோனமின் குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்குள் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினர். மே 11 அன்று திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்தன்று சோனமின் முகம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை ராஜாவின் மாமியார் இப்போது நினைவுகூறுகிறார்.

    திருமணத்திற்குப் பிறகு, சோனம் சாப்பிடுவதற்காக மட்டுமே மேலறைக்கு வந்ததாகவும், குடும்பத்தில் யாரிடமும் பேசவில்லை என்றும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் ராஜாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதில் யாரும் தலையிடவில்லை. சோனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என ராஜா குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அவர்கள் யாரும் சோனமை சந்தேகிக்கவில்லை, தங்கள் மகனுக்கு சோனம் சரியான மனைவி என்று நம்பினர்.

    திருமணத்திற்குப் பிறகு பயணம் செய்வது குறித்து குடும்பத்தில் எந்தப் பேச்சும் இல்லை. ஆனால், சோனம் ஒரு பயணம் செல்ல விரும்புவதாகக் கூறினார். முதலில் மறுத்த ராஜா, சோனமின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து சம்மதித்தார். பயணத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளையும் சோனம் தான் முன்பதிவு செய்துள்ளார்.

    பயணத்தின்போது விலையுயர்ந்த நகைகளை அணிய வேண்டும் என்றும் சோனம் வலியுறுத்தியுள்ளார். அப்போதும் ராஜாவின் குடும்பத்தினர் எதையும் சந்தேகிக்கவில்லை. ராஜாவின் மரணம் குறித்து இறுதியில் அறிந்ததும், குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×