என் மலர்
இந்தியா

திருமண மண்டபத்துக்குள் அழையா விருந்தாளியாக புகுந்த சிறுத்தை
- மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர்.
- சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், புத்தேஷ்வர் சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்து வந்தது. இரவு 11 மணி அளவில் திருமண மண்டபத்தின் பின்புறம் இருந்து அழையா விருந்தாளியாக ஒரு சிறுத்தை புகுந்தது.
இது திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும், இங்கும் ஓட தொடங்கினர். இதனால் திருமண மண்டபமே பரபரப்பானது.
அங்கு இருந்த மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர். மணமக்களின் குடும்பத்தினரும் பாதுகாப்புக்காக அங்கிருந்த வாகனங்களில் பதுங்கி கொண்டனர். இதனால் அனைவரும் உயிர்தப்பினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 2 மணிக்கு சிறுத்தை பிடிபட்டது. அப்போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தை புகுந்ததன் காரணமாக மணமக்களும், அவரது உறவினர்களும் 5 மணி நேரத்துக்கும் மேலாக காரில் பதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறுத்தை பிடிபட்ட பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் ''லக்னோவில் ஒரு திருமண மண்டபத்தில் சிறுத்தை நுழைந்த செய்தி கவலை அளிக்கிறது. பா.ஜ.க. அரசாங்கத்தில் காடுகளில் மனித அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இதனால் காட்டு விலங்குகள் உணவு தேடி நகரங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக சாதாரண மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இது ஒரு சிறுத்தை அல்ல, பெரிய பூனை என மூடி மறைக்குமா என்று தெரியவில்லை'' என கூறியுள்ளார்.






