search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.விடம் ஒருபோதும் பணிய மாட்டேன் - லாலு பிரசாத் யாதவ் தாக்கு
    X

    பா.ஜ.க.விடம் ஒருபோதும் பணிய மாட்டேன் - லாலு பிரசாத் யாதவ் தாக்கு

    • ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.

    பாட்னா:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×