search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி விவகாரத்தில் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்போம்: ராகுல் சூளுரை
    X

    அதானி விவகாரத்தில் கேள்விகள் எழுப்பிக்கொண்டே இருப்போம்: ராகுல் சூளுரை

    • தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.
    • காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ராய்ப்பூர் :

    சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடந்த 3 நாள் காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தையும் குறிவைத்து கவுதம் அதானி நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார். அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஒட்டுமொத்த பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவருகிறவரையில், நாங்கள் நாடாளுமன்றத்தில் ஆயிரமாயிரம் முறை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்து விட மாட்டோம்.

    அதானியின் நிறுவனம், நாட்டைக் காயப்படுத்துகிறது என்று அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கிறது.

    நாட்டின் அனைத்து வளங்களையும், துறைமுகங்களையும் ஒரே நிறுவனம் எடுத்துக்கொண்டு விட்டதை எதிர்த்து நாட்டின் சுதந்திரப்போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு திரும்புகிறது.

    பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் பெற்ற சக்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும். அதில் ஒட்டுமொத்த நாட்டுடன் நானும் பங்கேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், இந்த மாநாட்டில் பேசினார். அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என்று (எதிர்க்கட்சிகளிடம்) நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

    எல்லா எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒவ்வொருவரிடம் இருந்தும் எதிர்பார்ப்பு இருக்கிறது. காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கட்சிக்காக போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.

    பா.ஜ.க.வை எதிர்த்து நின்று போராடுகிற துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்த தைரியத்தை நாட்டுக்காக வெளிக்காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

    மண்டல அளவில் இருந்து காங்கிரஸ் அமைப்பினை கட்டமைத்து, பலப்படுத்த வேண்டும்.

    தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி சமாளிப்பது, நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்துவது என்பதில்தான் அரசியல் இருக்க வேண்டும்.

    நம் மீது பா.ஜ.க. அதிரடி சோதனைகளை நடத்தியது. ஆனால் நாம் வலிமையுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×