search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கர்நாடக காங்கிரஸ் வாழ்த்து: டி.கே.சிவக்குமார்
    X

    மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கர்நாடக காங்கிரஸ் வாழ்த்து: டி.கே.சிவக்குமார்

    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
    • நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரசின் வரலாறே நமது நாட்டின் வரலாறு. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான். ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் போராடி வருகிறது. இதற்கு காங்கிரசின் உள்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்பதே சாட்சி. நாங்கள் கட்சியிலும் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறோம். 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசில் உட்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளது.

    இதற்காக கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம். நாடாளுமன்ற தோ்தலில் கட்சி தோல்வி அடைந்ததால் ராகுல் காந்தி அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தி அந்த பொறுப்பை ஏற்றி கட்சியை வழிநடத்தினார். நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சி தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    கர்நாடகத்தில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 78 லட்சமாக உயர்த்தியுள்ளோம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தில் 500 நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நிஜலிங்கப்பாவுக்கு பிறகு கா்நாடகத்தை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கட்சியின் தலைவர் பதவி கிடைத்திருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    மல்லிகார்ஜூன கார்கே 50 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எந்த கட்சியிலும் தலைவர் பதவிக்கு இவ்வாறு தேர்தல் நடந்தது இல்லை. அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கட்சிக்கு மாநில மற்றும் தேசிய அளவில் பலம் கிடைத்துள்ளது. சோனியா காந்தியின் ரிமோட் கன்ட்ரோல் என்று மல்லிகார்ஜூனா கார்கேவை பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள்.

    பிரியங்கா காந்தி

    அப்படி என்றால் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை என்னவென்று அழைப்பது?. சோனியா காந்தி 20 ஆண்டுகாலம் கட்சி தலைவராக இருந்துள்ளார். அவரது ஆலோசனையை பெறாமல் இருக்க முடியுமா?. கர்நாடகத்தில் மல்லிகார்ஜூன கார்கே 3-வது அதிகார மையமாக திழக மாட்டார். அவர் தேசிய அளவில் ஒரே அதிகார மையமாக இருப்பார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உள்ளது. ராகுல் காந்தி இன்னும் 2 நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    மேலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×