என் மலர்
இந்தியா

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதற்கான காரணம் என்ன? - ஜெய்சங்கர் விளக்கம்
- அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
- நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது.
புதுடெல்லி:
அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டையொட்டி பா.ஜ.க. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் கட்சியின் இளைஞரணி சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழக மீனவர் பிரச்சனைக்கு, அவசர காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளே காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் போலீசார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருககிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.






