search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா
    X

    கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா

    • சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
    • உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

    இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.

    பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.

    சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.

    அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.

    டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×