என் மலர்
இந்தியா

மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்தே கொன்ற கணவன்.. 2 கி.மீ. நடந்து சென்று போலீசில் சரண்
- மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
- அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகித்து அவரை கணவன் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் அஸ்மா கான் (44 வயது). நொய்டாவில் செக்டார் 15 இல் தனது கணவன் நூருல்லா ஹைதர் (55 வயது) மற்றும் ஒரு மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் வைத்து மனைவியில் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அஸ்மாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக ஹைதர் சந்தேகித்தார். இந்த சந்தேகத்தின் காரணமாக, அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் தம்பதியினரிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன.
இதன் உச்சமாக நேற்று காலை 5 மணியளவில் அவர் மனைவியை கொலை செய்தார். தனது தாய் கொலை செய்யப்பட்டதாக மகன் உறவினர்களுக்கு போன் மூலம் கூறியுள்ளான். அவர்கள் அங்கு வருவதற்குள் கணவனே நேரடியாக போலீசில் சரணடைந்துள்ளார்.






