என் மலர்
இந்தியா

தேனிலவுக்கு அழைத்து சென்று கணவர் கொலை: கூலிப்படையினருக்கு ரூ.20 லட்சம் பேரம் பேசிய மனைவி
- கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
- கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.
இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.
ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.
சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






