என் மலர்
இந்தியா

அசாமில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சூறையாடிய இந்துத்துவா அமைப்பினர் கைது
- கல்வி நிறுவனங்களில் இத்தகைய மத ரீதியான கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர்.
- பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், நல்பாரி காவல்துறையினர் உடனடி நடவடிக்கை.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் புனித மேரி பள்ளிக்குள் புகுந்து கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சூறையாடிய விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நல்பாரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித மேரி பள்ளியில் மாணவர்களுக்காக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. டிசம்பர் 25-ஐ ஒட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் வண்ண விளக்குகளை விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரெனப் பள்ளிக்குள் புகுந்து அடித்து நொறுக்கியது.
பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிய அந்த கும்பல், கல்வி நிறுவனங்களில் இத்தகைய மத ரீதியான கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், நல்பாரி காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சூறையாடல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 முக்கிய நபர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பண்டிகைக் காலங்களில் இத்தகைய மோதல்கள் நடப்பதைத் தவிர்க்கக் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.






