என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை 'இந்து சுற்றுலாத் தலம்' என அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு!
- பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
- பயங்கவராத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்
ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் செய்தது.
பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இதற்கிடையே பஹல்காமில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இத்தகு சூழலில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பயங்கவராத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு "ஷாஹீத் இந்து சுற்றுலாத் தலம்' என்று பெயரிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில் கோரிக்கைகளை நிராகரித்து இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசை தான் நாட வேண்டும் என்றும் அரசின் கொள்கை உருவாக்கத்தில் தாங்கள் தலையிட முடியாது என்றும் தெரிவித்தது.






