என் மலர்
இந்தியா

திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பா.ஜ.க-வில் இணைந்தார்
- ராஜேந்திரன், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்திய கம்யூனிஸ்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.
இந்த சூழலில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன், பாரதிய ஜனதாவில் இணைய போவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவில் இணைவது தொடர்பாக விவாதித்தேன். அந்தக் கட்சியின் முடிவுக்கு காத்திருக்கிறேன் என்றார். மேலும் பா.ஜ.க.வில் சேர்வதற்கு எந்த தனிப்பட்ட கோரிக்கையோ, சிறப்பு நிபந்தனையையோ முன்வைக்கவில்லை என்றும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகத்திற்கு வந்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கட்சி உறுப்பினர் பதவியை முறையாக வழங்கினார்.
3 முறை கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான அவர், கடந்த 4 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






